வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நடுங்க வைக்கும் சம்பவம் நீதிமன்ற தீர்ப்பால் இப்போது மறுபடியும் ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கே.வி. குப்பம் அருகே ஓடியபடி செல்லும் ரயிலில், நான்கு மாத கர்ப்பிணியான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, பின் ரயிலிலிருந்து தள்ளி கொலை முயற்சி செய்த ஹேமராஜ் என்ற கொடூர நபர், குற்றவாளி என நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண், திருப்பூரில் பணியாற்றி, சொந்த ஊர் நோக்கி கோயம்புத்தூர் – திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பிப்ரவரி 7ஆம் தேதி பயணித்த போது இந்த சோதனையை எதிர்கொண்டார். மகளிர் பெட்டியில் தனியாக இருப்பதை கண்டு வாய்ப்பு பார்த்த ஹேமராஜ், தன்னுடைய பாலியல் வன்கொடுமையை அந்த பெண்ணிற்கு காட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் கத்திக் கூச்சலிட்டார். தப்பிக்க முடியாமல், அந்தப் பெண்ணின் கையை உடைத்து ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டு தப்பியோட முயன்றார். தலை, கை, கால்களில் பலத்த காயங்களுடன் ரத்த வடியும் நிலையில் அந்த பெண்ணை ரயில்வே காவல்துறையினர் மீட்டு, உடனே மருத்துவமனைக்கு அனுப்பினர். பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகே உயிர் தப்பிய அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விக்கு இப்போது உறுதியான பதில் கிடைத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, ஹேமராஜை குற்றவாளி என அறிவித்து, வரும் ஜூலை 14ஆம் தேதி அவனுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த கொடூரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை பெண்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.