திமுகவில் ஏற்பட்ட பிளவு?? தனித்து போட்டியிடும் திருமாவளவன்!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விசிக, தற்போது தனித்துப் போட்டியிடும் என அதன் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

முன்னதாக திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்தன.

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்ட விளக்கத்தில், விசிக 3 தொகுதிகளை கோரியிருந்ததாகவும், ஆனால் திமுக தரப்பில் ஒரு தொகுதி மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுவும் எந்த தொகுதி என்பது கூட இறுதி செய்யப்படாத நிலையில் இருந்ததாக கூறியுள்ளார். மேலும், விசிக போட்டியிட விரும்பிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலையில், விசிக சார்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், விசிக போட்டியிடாத பிற தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த பிளவு தேர்தல் நிலவரத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram