பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டம், குஷ்டகி தாலுகாவில் உள்ள மாதுர் கிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், கோழித் துண்டு சிறியதாக இருந்ததாகக் கூறி ஏற்பட்ட தகராறில், உணவு பரிமாறிய நபரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, கொலையாளி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, மாதுர் கிராமத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, விருந்தில் பங்கேற்ற வினோத் என்ற இளைஞர், தனக்கு பரிமாறப்பட்ட கோழித் துண்டு சிறியதாக இருப்பதாகக் கூறி, உணவு பரிமாறிக் கொண்டிருந்த பவனேஷ் (23) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வினோத் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவனேசின் மார்பில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குஷ்டகி போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த வினோத் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர்கள் மூவரையும் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சண்டையை விலக்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.