திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகேயுள்ள தெக்களூர் ஊராட்சியைச் சேர்ந்த இன்பராஜ் என்ற 23 வயது இளைஞர் திருத்தணியில் உள்ள ஒரு பிரபல மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆர்.கே. பேட்டை தாலுகாவைச் சேர்ந்த செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த சிந்து(22 வயது) என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். சிந்து சுங்குவார் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். இருவருக்கும் காதலித்து கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நிலையில் இன்பராஜ், சிந்துவிடம் திருமணம் செய்வதாக கூறி, நம்பிக்கையை ஏற்படுத்தி, அவளிடமிருந்து ரூ.1 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சில நாட்களில், சிந்து எதிர்பாராதவிதமாக ஒரு அதிர்ச்சி செய்தியை தெரிந்து கொண்டார். இன்பராஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்பது தான் அந்த செய்தி.
உண்மையை உறுதி செய்தபின், தன்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தி பணத்தை பெற்றுவிட்டு தன்னை விட்டு விலகியதாக சிந்து சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிந்துவின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இன்பராஜை விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணையில் சிந்துவின் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என தெரியவந்த நிலையில், அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து காதலித்தவர் நல்லவரா? கெட்டவரா? என அறியாமல் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.