சுயமரியாதையை மட்டும் விற்றுவிடாதீர்கள் துரோகங்களைச் சுட்டிக்காட்டி மேடையில் உருகிய ரவி மோகன்.
சென்னை:
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார்.
சுயமரியாதை போராட்டம்:
மேடையில் பேசிய அவர், “பராசக்தி என்பது வெறும் படம் மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் சுயமரியாதையைக் காப்பாற்றும் படம். நானும் கடந்த சில காலமா என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றத்தான் போராடிட்டு இருக்கேன். எத்தனையோ முயற்சிகள் செய்திருக்கிறேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உழைப்பு மட்டும்தான்” என்று பேசினார்.
முதுகில் குத்துபவர்களுக்குப் பதிலடி:
யாரையும் நேரடியாகக் குறிப்பிடாமல் தனது ஆதங்கத்தைக் கொட்டிய அவர், “நம்ம கண்ணுக்கு முன்னாடி வர்றவங்களைப் பத்தி நமக்குக் கவலை இல்லை, அவங்களைச் சமாளிச்சுடலாம். ஆனா, கூடவே இருந்துட்டு முதுகில் குத்துறவங்களைப் பத்தி எனக்கு எப்போதுமே கவலை கிடையாது. அவங்களை நான் கண்டுக்கிறதும் இல்லை” என்றார்.
தம்பிகளுக்கு ஒரு அட்வைஸ்:
இறுதியாக அங்கிருந்த ரசிகர்களைப் பார்த்து, “இங்கே இருக்கிற எல்லாருக்கும் ஒரு அண்ணனாகச் சொல்கிறேன், வாழ்க்கையில என்ன இழந்தாலும் பரவாயில்லை, உங்களுடைய சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும், எதற்காகவும் இழந்துடாதீங்க. அதை மட்டும் பிடிச்சுக்கிட்டீங்கன்னா மத்த எல்லாமே தானா தேடி வரும்” என்று அட்வைஸ் கொடுத்தார்.
சமீபகாலமாக ரவி மோகனைச் சுற்றிப் பல தனிப்பட்ட சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், அவர் மேடையில் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது


