2026 தேர்தலுக்கான அதிமுகவின் மாஸ்டர் பிளான் ரெடி!! தொண்டர்களுக்கும் ஓகே!!

AIADMK's master plan for the 2026 elections is ready!! OK for the volunteers too!!

2026 தேர்தலுக்கான அதிமுகவின் மாஸ்டர் பிளான் ரெடி!! தொண்டர்களுக்கும் ஓகே!!

வருகின்ற சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தற்போதையிலிருந்து தயாராகி வருகிறது.

அடுத்தாண்டு 2026-ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெற முடியும் என அக்கட்சியின் தொண்டர்கள் கருதி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாக, மற்றும் 5 சிறுகட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அதிமுக கூட்டணியால் 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த தேர்தலில் அதிர்ச்சிகரமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் தோல்வி அடைந்தனர்.

இந்த தேர்தலுக்கு பின்னரான பேட்டியில் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், மற்றும் சி.வி.சண்முகம் போன்றோர்கள் தேர்தலில் தோல்விக்கு பாஜக உடனான கூட்டணி மட்டுமே காரணம் என குற்றம் சாட்டினர். மற்றவர்கள் வெளிப்படையாக கூறாவிட்டாலும் அவர்களின் கருத்தை ஆதரித்தனர். இந்த குற்றச்சாட்டுகளால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான வார்த்தை போர் முற்றியது. இதில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. அதனைத் தொடர்ந்து 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி பாஜகவை விடுத்து தேமுதிக உட்பட சில கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றியை பெறவில்லை.

இதற்கு காரணம் அதிமுக தனித்தனி அணியாக செயல்பட்டு வருவது தான் என கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியில் ஓ. பன்னீர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரன், ஆகியோர் கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இதன்காரணமாக அவர்கள் ஆளுக்கு ஒரு அணியாகப் பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருவதால் 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை அதிமுக எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இப்படி பல துண்டாகி இருக்கும் அதிமுக இதேபோல் தொடர்ந்து போட்டியிட்டால் தோல்வியை சந்திப்பது உறுதி என அக்கட்சியின் தொண்டர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய ஆளுங்கட்சியான திமுக வலுவான கூட்டணி தளத்துடன் 2026- ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தற்போது புதிய கட்சியான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை சந்திக்க இருப்பதால் அதிமுக கட்சிக்கான நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. வாக்குகள் பிரிவு ஏற்படும் என்பதால் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்தக்கட்ட முக்கிய பணிகளில் இறங்க வேண்டிய அத்தியாவசியம் அதிமுக கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னாதாகவே இதுப்பற்றி முடிவெடுக்க கோரி செங்கோட்டையன் உட்பட சில முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி‌.வேலுமணி சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நேற்று முன்தினம் நடைபெற்ற அவரது மகனின் திருமண விழாவில் பாஜக கட்சியினை சேர்ந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

அந்தத் திருமண விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி ஆகியோர் அண்ணாமலையுடன் கைகுலுக்கி பேசியது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.

வருகின்ற சட்டசபை தேர்தலுக்காக வலுவான கூட்டணியை அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களமிறங்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருதினாலும் பன்னீர்செல்வம், சசிகலா, மற்றும் தினகரன் ஆகியோரை மட்டும் கட்சியில் எப்போதும் சேர்க்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால் அதற்கு நேர்மறாக அதிமுக ஒன்றிணைந்து வலுவான கூட்டணியை அமைத்தால் மட்டுமே திமுக கட்சியை வெல்ல முடியும் என அதன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் தங்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

அதற்கு வலுசேர்க்கும் வகையில் நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘எங்களுக்கு எப்போதும் ஒரே எதிரி திமுக தான், அதை வீழ்த்துவது தான் எங்களது லட்சியம் நோக்கம்’ என்று கூறியுள்ளார். மேலும் பாஜக கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு 6  மாதம் கழியட்டும் என கூறியுள்ளார். தனித்துப் போட்டியிடும் சில கட்சிகளையும் இந்த கூட்டணி வளையத்துக்குள் கொண்டு வர மாஸ்டர் பிளான் நடைபெற்று வருகிறது.

இதிலிருந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என அவர் மறுக்கவில்லை. அதிமுக நிர்வாகிகள் தங்களது கருத்தை அவரிடம் தெரிவித்து விட்டதால் தேர்தல் நெருங்கும் போது அதிமுக பாஜக இடையேயான நெருக்கமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதற்கான முடிவுகள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்டாயம் தெரிய வரும். அதுவரை கட்சியின் நடவடிக்கைகளை தொண்டர்களும் நிர்வாகிகளும் கவனித்து வருகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram