மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக விமான எரிபொருளான ஏடிஎஃப் (ATF) விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ‘எரிபொருள் சார்ஜ்’ (Fuel Surcharge) என்ற பெயரில் பயணக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
இந்த உயர்வு மார்ச் 12, 2026 முதல் மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு (Domestic) ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 399 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல சர்வதேச விமானங்களுக்குப் (International) பயண தூரத்தைப் பொறுத்து ரூ.930 முதல் ரூ.4,592 ($10 – $50) வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விமான இயக்கச் செலவில் சுமார் 40 சதவீதத்தை எரிபொருள் செலவே பிடிப்பதால், இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என விமான நிறுவனங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நீண்ட தூரப் பயணங்களுக்கு மார்ச் 18 முதல் கூடுதல் கட்டணம் (Phase 2) வசூலிக்கப்படும். உதாரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கான சார்ஜ் 100 டாலரில் இருந்து 125 டாலராகவும், அமெரிக்காவிற்கு 150 டாலரில் இருந்து 200 டாலராகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மற்ற தனியார் விமான நிறுவனங்களும் இதைப் பின்பற்றித் தங்களது கட்டணங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே வெளிநாடு செல்லும் இந்தியர்கள் விமானக் கட்டண உயர்வாலும், போர்ச் சூழலாலும் தவித்து வரும் நிலையில், இந்த ‘சர் சார்ஜ்’ உயர்வு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. இருப்பினும், ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது என்பது ஒரு சிறிய ஆறுதலாகும்


