சார்லி கிர்க் மரணம்.. சர்ச்சைக் கருத்து பதிவிட்ட விசாக்கள் ரத்து!! அமெரிக்க அதிரடி நடவடிக்கை!!

சார்லி கிர்க் படுகொலை

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல பழமைவாதச் செயல்பாட்டாளர் சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டதைச் சமூக வலைதளங்களில் கொண்டாடியும், கேலி செய்தும் கருத்து பதிவிட்ட ஆறு வெளிநாட்டினரின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத் துறை (U.S. State Department) ரத்து செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விசா வைத்திருக்கும் சில வெளிநாட்டினர் சமூக வலைதளங்களில், கிர்க்கின் மரணத்தை “பாராட்டவோ, நியாயப்படுத்தவோ அல்லது இலகுவாக எடுத்துக் கொள்ளவோ” கூடாது என அமெரிக்க நிர்வாகம் எச்சரித்திருந்தது.

இந்த எச்சரிக்கையை மீறி, சார்லி கிர்க்கின் மரணத்தை விமர்சித்தும், கொண்டாடியும் பதிவுகளை வெளியிட்ட ஆறு வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கர்களுக்கு மரணத்தை விரும்புபவர்களை விருந்தினர்களாக நடத்த வேண்டிய கடமை அமெரிக்காவிற்கு இல்லை. சார்லி கிர்க்கின் கொடூரமான படுகொலையைக் கொண்டாடிய விசா வைத்திருப்பவர்களை வெளியுறவுத் துறை தொடர்ந்து அடையாளம் கண்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா ரத்து செய்யப்பட்ட ஆறு வெளிநாட்டினரும் அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, பிரேசில், ஜெர்மனி மற்றும் பராகுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று வெளியுறவுத் துறை குறிப்பிட்டுள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

இவர்களில் ஒரு அர்ஜென்டினா நாட்டவர், “இனவெறி, வெளிநாட்டவர் வெறுப்பு மற்றும் பெண்கள் வெறுப்பைக் கிர்க் தனது வாழ்நாள் முழுவதும் பரப்பினார்” என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவர் ஜெர்மன் மொழியில், “பாசிஸ்ட்கள் இறக்கும்போது, ஜனநாயகவாதிகள் வருத்தப்பட மாட்டார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இத்தகைய கருத்துகள் நாட்டின் சட்டங்களுக்கு எதிரானது என்றும், இவர்கள் அமெரிக்காவில் வரவேற்கத்தக்கவர்கள் அல்ல என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

சார்லி கிர்க்கின் மரணத்தை ஆதரிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடும் வெளிநாட்டவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram