தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் வியூகம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு முக்கிய நேர்காணலில் அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) பாஜக கூட்டணி அமைக்கப் போவதாக வெளியான வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “விஜய்யுடன் கூட்டணி அமைக்க நாங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஒருவேளை விஜய் எங்களுடன் இணைந்தால், அது எங்களது வாக்கு வங்கிக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும்” என அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், அமித்ஷாவின் இந்தப் பேச்சு தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தில் கூட்டணியின் தலைமை குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் மூலம் அதிமுக – பாஜக உறவில் எந்த விரிசலும் இல்லை என்பதையும், இபிஎஸ்-ன் தலைமையை டெல்லி மேலிடம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். திமுக அரசின் தோல்விகளை மக்கள் உணர்ந்துள்ளதாகவும், இந்த முறை தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். விஜய்யின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில், அமித்ஷாவின் இந்த ‘விஜய் எதிர்ப்பு’ மற்றும் ‘அதிமுக ஆதரவு’ நிலைப்பாடு, தேர்தல் களத்தில் ஒரு புதிய துருவமுனைப்பை உருவாக்கியுள்ளது.




