சிட்னி: இந்திய கிரிக்கெட்டின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் (BBL) டி20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடும் முதல் முன்னணி இந்திய வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெறுகிறார்.
அஷ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதனால், வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தடையில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அஷ்வின் தற்போது வெளிநாட்டு லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் (Cricket Australia), அஷ்வினை பிக் பாஷ் லீக்கிற்கு அழைப்பதற்காக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக, தற்போது அவர் சிட்னி தண்டர் அணியில் இணைந்துள்ளார்.
சிட்னி தண்டர் அணி, அஷ்வின் ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. எனினும், ஆஸ்திரேலிய ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த ஒப்பந்தம், பிக் பாஷ் லீக் தொடருக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அஷ்வினின் வருகை, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்கும் என்றும், தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால், அஷ்வின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் நடக்கும் ILT20 தொடரிலும் பங்கேற்பதால், ஜனவரி 4-ஆம் தேதிக்கு பின்னரே சிட்னி தண்டர் அணியுடன் இணைவார். இதனால், தொடரின் பிற்பகுதியில் மட்டுமே அவர் களமிறங்குவார்.
சிட்னி தண்டர் அணியில் டேவிட் வார்னர், ஷதாப் கான், லோக்கி ஃபெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் ஏற்கனவே உள்ளனர். அஷ்வினின் அனுபவம் மற்றும் சுழற்பந்து வீச்சு திறன், அந்த அணியின் பந்துவீச்சுப் பிரிவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


