வாஷிங்டன்: இந்திய வீரர் குரூப் கேப்டனாக இருக்கும் சுபான்ஷு சுக்லா மற்றும் 3 சக குழு உறுப்பினர்கள் சர்வதேச விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு புறப்பட தயார் நிலையில் உள்ளனர். முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னன்ஸ்கி, சுபான்ஷு சுக்லா மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு பணிகளுக்காக சென்றனர்.
இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் கிரேஸ் விண்கலத்தில் புறப்படுவார்கள். 22 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை மாலை 3 மணி அளவில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தரை இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தயார் நிலையில் 4 விண்வெளி வீரர்களும் உள்ளனர்.
கடைசி சில நாட்களில் காட்சி பதிவுகளை விண்வெளி வீரர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தனது எக்ஸ் சோசியல் மீடியா பக்கத்தில் நீரேற்றம் செய்யப்பட்ட இறால் உணவுகளை உண்டு மகிழ்ந்ததும் பதிவிட்டிருந்தார்.
மேலும், சுபான்ஷு சுக்லா இந்தியாவிலிருந்து கேரட் அல்வா மற்றும் மாம்பழ ஜூஸ் கொண்டு சென்றது, சக நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததாகவும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரவு உணவை எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த வீரர் ஜானி கிம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்த அனுபவங்கள் மறக்க முடியாதது என்றும், புதிய நண்பர்களுடன் உணவை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார்.