சந்தேகத்தால் நடந்த கொடூரம்!!நாடகமாடிய கணவன் கைது!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் நடந்த ஒரு குடும்ப விபத்து தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான முத்துப்பாண்டியன் (வயது 38), இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது திருமணம் 10 வருடங்களுக்கு முன்பு முத்துக்குமாரி (28) என்ற பெண்ணுடன் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனினும், நான்கு வருடங்களுக்கு முன், முத்துக்குமாரி ஒரு வாலிபருடன் தவறான உறவு வைத்து கணவனை விட்டுவிட்டு வெளியேறினார். சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் குடும்பத்துடன் சேர விரும்பி வந்த முத்துக்குமாரியை, மன்னித்து, முத்துப்பாண்டியன் வீட்டிற்கு திரும்ப அனுமதித்தார். ஆனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமாரி தூக்குப்போட்டு உயிரிழந்ததாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்கை விசாரித்தபோது, பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத்திணறல் காரணமாகவே மரணம் ஏற்பட்டது என்று தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கணவர் முத்துப்பாண்டியனை காவல்துறையினர் விசாரணைக்கு எடுத்தனர். விசாரணையில், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவர், கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் மரணத்தை தற்கொலை போல் உருவாக்க அவர் தூக்கில் தொங்கவைத்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சின்ன கோவிலாங்குளம் மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram