சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி நாகசுதா ஆகியோர் பச்சிளம் குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. ஈரோடு பகுதியை சேர்ந்த தம்பதிகளின் பச்சிளம் குழந்தையை எடப்பாடியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்படி குழந்தையை ரூ 7 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதில் இடைத்தரகர்களாக செயல்பட்ட மோகன்ராஜ் மற்றும் நாகசுதா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்து சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல், ஈரோடு போன்ற பகுதிகளில் சேர்ந்த குழந்தைகளின் புகைப்படங்கள் கோப்புகளாக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு துணையாக மேலும் 4 பேரை கைது செய்துள்ளனர். ஸ்ரீதேவி,பத்மாவதி, பர்வீன் மற்றும் ஜனார்த்தனன் ஆகிய நான்கு பேர் விசாரணையின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்திய போது குழந்தை பேர் இல்லாத தம்பதிகள், வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பத்தினர் ஆகியோரை குறி வைத்து மூளைச்சலவை செய்து குழந்தைகளை விற்க தூண்டியதாக தெரியவந்தது.
குழந்தைகளை விற்று அதில் வரும் பணத்தை ஒரு பங்கை குழந்தையின் பெற்றோருக்கு வழங்கி வந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. இவர்கள் மட்டுமல்லாது மேலும் இருவர் இந்த குழந்தை விற்பனை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.