நாமக்கல்: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் திருநாளை முன்னிட்டு நாமக்கல்லில் இருக்கும் முஸ்லிம்களுக்கு சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாமக்கல்லில் இன்று (ஜூன் 7) பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்களுக்கு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
நாமக்கல் பேட்டை அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகையானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நாமக்கல் சேலம் சாலையில் உள்ள ஈக்தா மைதானத்தில் இன்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. நாமக்கல் பேட்டையின் பள்ளிவாசலில் இருந்து ஈத்கா மைதானம் வரை இஸ்லாமியர்கள் அனைவரும் ஊர்வலம் போல் ஒன்று திரண்டனர்.
அரசு ஹாஜி சாதிக்பாட்ஷா இந்த சிறப்பு தொழுகையை ஆரம்பித்து வைத்தார். மேலும், முக்கியமாக முத்தவல்லி அல்ஹாஜ் கெ தௌலத்கான் முன்னிலையில் நடைபெற்றது. இந்தத் தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உலகில் உள்ள அனைத்து தமிழர்களின் அமைதியான வாழ்விற்கு தொழுகை நடத்தப்பட்டது என தெரிவித்தனர்.
தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது. இங்கு மட்டுமல்லாது முஸ்லிம்கள் வாழும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தொழுகைகள் ஏற்படுத்தப்பட்டு ஏழை இஸ்லாமியர்களுக்கு நல உதவிகளும், குர்பானி கொடுக்கும் நிகழ்வுகளும் நடந்து பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.