அண்ணாமலை பெயரை மேற்கொண்டு தம்பதியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில், போலீசார் பாஜகவை சேர்ந்த 3 பேரை சாமிநாதன் (எ) ராஜராஜசாமி (52), கோகுல கண்ணன் மற்றும் ராசுக்குட்டியை கைது செய்துள்ளனர்.
நாகராஜ்–நாகமணி தம்பதியின் குடும்பத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, கடந்த 2023-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோவை கோர்ட் கடந்த மே மாதம் அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஜூன் மாதம் இந்த தொகை வழங்கப்பட்ட நிலையில், வழக்கில் உதவி செய்ததாக அறிமுகமான மூன்று பேர், இழப்பீடு தொகை கிடைக்க நாங்கள் தான் காரணம் எனக் கூறி, ரூ.10 லட்சத்தை மிரட்டி பெற்றதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் மீண்டும் தம்பதியை தொடர்பு கொண்டு அண்ணாமலைக்கு கட்சி நிதியாக ரூ.10 லட்சம் வழங்கக் கேட்டு, பணம் தராவிட்டால் ஆளையே “தூக்கிவிடுவோம்” என்ற மிரட்டலையும் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தனக்கு இந்த சம்பவத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாததாக அன்னூர் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, மோசடியில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர்.


