நார்வே செஸ் 2025 தொடரின் ஆறாவது சுற்றில், இந்தியாவின் இளம் செஸ் வீரர் டி. குகேஷ் (வயது 18) செஸ் உலகின் தலையாய வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி, வரலாற்று சாதனை படைத்தார். இந்த வெற்றி, உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்ட குகேஷுக்கு கார்ல்சனை எதிர்த்து கிளாசிக்கல் முறையில் கிடைத்த முதல் வெற்றி ஆகும். போட்டியின் பெரும்பாலான நேரம் கார்ல்சன் முன்னிலையில் இருந்தார். அவர் தனது தேர்ச்சியான நுட்பங்களாலும் ஆட்ட நெருக்கடிகளையும் திறமையாக சமாளித்திருந்தார். ஆனால், முடிவில் நேரநெருக்கடி காரணமாக அவர் செய்த சில தவறுகளை குகேஷ் திறமையாக பயன்படுத்தி ஆட்டத்தைத் தன் பக்கம் திருப்பினார். அந்த நெருக்கடி கார்ல்சனின் உச்சமான மன அழுத்தத்தையும் வெளிப்படுத்தியது. குகேஷின் வெற்றியை அங்கிருந்தோர் உற்சாகத்துடன் பாராட்டினர். ஆனால், கார்ல்சன் தனது தோல்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேஜையை கோபமாக அடித்து தனது மனஅழுத்தத்தை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் குகேஷிடம் கைகுலுக்கி மன்னிப்புக் கேட்டார்.
வெற்றியின் பின்னர் குகேஷ் மிக அடக்கமாக, “100 முறை விளையாடினால் 99 முறை நான் தோல்வியடைவேன், இன்று எனக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள்” என்று கூறினார். அதேவேளை, அவர் கார்ல்சனின் நேரநெருக்கடி பற்றியும், அது எவ்வாறு ஆட்டத்தை மாற்றியமைத்ததையும் பகிர்ந்தார்.
“இந்த போட்டியில் நான் கற்றுக்கொண்டது, நேரநெருக்கடியில் மிகவும் அசம்பாவிதமான சூழல் உருவாகும் என்பதுதான்.” சூசன் போல்கரின் பாராட்டு பிரபல செஸ் வீராங்கனை சூசன் போல்கர் குகேஷின் வெற்றியை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “குகேஷ் உலக சாம்பியனை மரியாதையுடன் வீழ்த்தினார். அவர் போர்வீரனின் இதயத்துடன் விளையாடினார்.
சிக்கலில் இருந்தும், நேர நெருக்கடியிலும், கடுமையாக போராடி வெற்றி பெற்றார். என்று பாராட்டினார். இந்திய செஸ் ரசிகர்களின் பெருமை இந்த வெற்றி, இந்திய செஸ் உலகிற்கு பெரும் ஊக்கமளிக்கிறது. இளம் வீரர்கள் கார்ல்சனை எதிர்த்துப் பலமாக விளையாட முடியும் என்பதை குகேஷ் நிரூபித்திருக்கிறார். மேலும், அவரின் அமைதியான அணுகுமுறை, மனத்தெளிவு மற்றும் அடக்கமான பேச்சு அவரை உண்மையான உலக சாம்பியனாக உயர்த்துகிறது.