கொச்சி: மலையாளத் திரையுலகின் பிரபல நடிகை ஸ்வேதா மேனன், ஆபாசமான மற்றும் கவர்ச்சி மிகுந்த படங்களில் நடித்ததன் மூலம் நிதி ஆதாயம் பெற்றதாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மத்திய காவல் துறையினர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மார்ட்டின் மெனச்சேரி என்ற சமூக ஆர்வலர், நடிகை ஸ்வேதா மேனன் சில திரைப்படங்களில் கவர்ச்சி காட்சிகளில் நடித்ததாகவும், அக்காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஆபாச வலைத்தளங்களில் பரவி நிதி லாபம் ஈட்டியதாகவும் கூறி நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில், எர்ணாகுளம் மத்திய காவல் துறையினர் ஸ்வேதா மேனன் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 67A (ஆபாசமான உள்ளடக்கத்தை மின்னணு வடிவில் வெளியிடுவது அல்லது பரப்புவது) மற்றும் ஒழுக்கக்கேடான போக்குவரத்து (தடுப்பு) சட்டம் 1956-இன் பிரிவுகள் 3 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு, மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலில் (AMMA) தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு ஸ்வேதா மேனன் தயாராகி வரும் வேளையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இது ஒரு திட்டமிட்ட முயற்சி என்று சிலர் விமர்சித்துள்ளனர். மேலும், அவர் நடித்த ‘ரதிநிர்வேதம்’, ‘களிமண்ணு’ போன்ற படங்கள் தணிக்கை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டவை என்றும், அதில் இடம்பெற்ற காட்சிகள் திரைப்படத்தின் கதைக்கு தேவைப்பட்டவை என்றும் ஸ்வேதா மேனனுக்கு ஆதரவான தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஸ்வேதா மேனன் தரப்பில் இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. காவல்துறை விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.