கோகுல்ராஜ் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியை சேர்ந்தவர். அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருடைய காதலியுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று உள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக வந்த காதலியின் ஜாதியினர் அவரை அடித்து, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று இருந்தனர். அடுத்த நாள் அவர் நாமக்கல் ரயில்வே ட்ராக்கில் தலை அறுபட்ட நிலையில் சடலமாக மீட்டு எடுக்கப்பட்டு இருந்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ், ரகு, சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய கும்பல் 10 பேருக்கு ஏழு வருடங்களுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. அவர்களுடைய ஜாதி வெறி ஒரு குடும்பத்தின் நிலையையே சரித்துள்ளது. அந்த குடும்பம் இன்னமும் அதிலிருந்து மீண்டு வர முடியாது தவிக்கின்றனர். காதலியின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
தற்சமயம் யுவராஜ் ஜெயிலில் அவரது நடத்தை முன்னேற்றமாக உள்ளது என்று கருதி அவரது மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்காக பரோலில் வந்துள்ளார். ஜாதி விட்டு ஜாதி காதலித்த குற்றத்திற்காக இவர்கள் இப்படி கரு அறுத்திருப்பதை பலதரப்பட்ட மக்கள் அவரை தீரன் சின்னமலை வாரிசாகவும், கொங்கு நாட்டின் லீடர் எனவும் புகழாரம் சூடுகின்றனர். பரோலில் வெளிவந்த கைதிக்கோ அமோக வரவேற்பு, இப்படி இருந்தால் அவர் திருந்துவதற்கு என்ன வாய்ப்பு இருக்கும். அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி என்ன பயன். சரி இவரது முன் வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால், ஈமு கோழி பிரச்சனையில் சொந்த ஜாதிக்காரர்களையே ஏமாற்றி உள்ளார். சொந்த ஜாதிக்காரர்களின் முன்னேற்றத்தை பின்னடைவு செய்து, ஜாதிக்காக கொலை செய்ததை பெருமிதமாகக் கொண்டு வருவதெல்லாம் என்ன வித மனநிலை. சாகும் வரை ஆயுள் தண்டனை பெறப்பட்ட கைதிகளின் குடும்ப நிலையும் குறித்து அவர்களுக்கு துளியும் கவலை இல்லையா! என்றவாறு பலதரப்பட்ட மக்கள் எடுத்துரைத்து வருகின்றனர். ஜாதி என்பது இயல்பாக பிறக்கும் இடத்தைப் பொறுத்தது. அதை முன்னிறுத்தி ஒரு உயிரை கருவறுப்பது என்ன மனநிலை? எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.