சென்னை: கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான அல்லது கனமான மழையின் போது ஒரு சில இடங்களில் 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதால் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவுறுத்தியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம். அதிகபட்ச வெப்ப நிலையாக 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26-27 டிகிரி செல்சியஸ் இருக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, தென்காசி, கோயம்புத்தூர் மற்றும் நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், ஒரு சில இடங்களில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.