மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக, இந்தியாவில் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னையில் கடந்த சில மணி நேரங்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறிப்பாக, சென்னை அண்ணா சாலை, கோயம்பேடு, அடையாறு மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. “கேஸ் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து பெட்ரோல் விநியோகமும் நிறுத்தப்படலாம்” என்ற அச்சமே இந்தக் கூட்டத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
வெறும் வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்பாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல், டீசலை வாங்கிச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு கேன்களில் எரிபொருள் நிரப்பப் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வலுக்கட்டாயமாக வாங்கிச் செல்கின்றனர். இந்தத் திடீர் தேவையால் பல பங்க்குகளில் ‘நோ ஸ்டாக்’ (No Stock) போர்டு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்துத் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கூறுகையில், “தற்போதைக்குத் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்குப் போதிய கையிருப்பு உள்ளது; பொதுமக்கள் வதந்திகளை நம்பித் தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாங்கிச் சேமிக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், போர்ச் சூழல் தீவிரமடைந்து வருவதால் அத்தியாவசியத் தேவைகளுக்காக இப்போதே சேமித்து வைப்பதே நல்லது என வாகன ஓட்டிகள் கருதுகின்றனர். இந்தத் திடீர் நெரிசலால் சென்னையின் பல முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.


