இன்று தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 72 ஆவது அகவை நாள். இவரது பிறந்த நாளை கடந்த இரண்டு நாட்களாகவே அந்தக் கட்சி நிர்வாகத்தினர் இணைந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நாள் ஆரம்பிக்கும்போதே மாநில அரசு முதல் மத்திய அரசு வரை அனைத்து முதன்மை தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் திமுக தலைவர்கள் சிலர் இணைந்து ஹிந்தியை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கும்படி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழக முதலமைச்சர் தொண்டர்களுக்கு தொடர் கடிதம் எழுதி வந்துள்ளார். மேலும், மொழியை படிக்க வேண்டாம்! என்று கூறவில்லை திணிக்க வேண்டாம்! என்றுதான் கூறுகிறோம் என்று அவரது தொடர் போராட்டத்தை நிலை நிறுத்தி இருந்தார். சமீபத்தில் நடந்த அவரது பிறந்த நாள் கொண்டாட்ட விழா மேடையில் கூட மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும். ஹிந்தி திணிப்பை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இவரது பிறந்த நாள் வாழ்த்தாக, மீண்டும் மாநிலங்களில் சுயாட்சி மற்றும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு ஆகியவையே தமக்கு வாழ்த்து செய்தியாக வேண்டும் என்று பகிர்ந்துள்ளார். தமிழகத்துக்கு இருமொழிக் கொள்கைகள் தான் நடைமுறைக்கு வேண்டும். மும்மொழிக் கொள்கையை திணிக்க வேண்டாம் என்று அவரது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனது கவலைகள் எல்லாம் நாட்டைப் பற்றியும், மாநிலங்களை பற்றியும், மாநில உரிமை பற்றியும் தான் என்று பிறந்தநாள் அன்று செய்தியை வெளியிட்டுள்ளார்.


