சிவகங்கை சீமையில் முதல்வர் என்ட்ரி!! ரூ.2,559 கோடியில் 49 திட்டங்கள்.. காரைக்குடியில் மினி டைடல் பூங்கா!!

CM Stalin Sivaganga visit January 2026 projects

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று (ஜனவரி 30, 2026) சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தென் மாவட்ட மக்களின் ஆதரவைத் திரட்டும் விதமாகவும், வளர்ச்சித் திட்டங்களை உறுதி செய்யவும் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் வருகையை ஒட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலை சிராவயல் கிராமத்தில், மகாத்மா காந்தி மற்றும் தோழர் ப. ஜீவா ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பினை நினைவுகூரும் வகையில் காந்தி-ஜீவா நினைவு இல்லத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து காரைக்குடியில் கவிஞரசர் முடியரசனின் சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.

இரண்டாம் நாளான நாளை (ஜனவரி 31), காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை (Mini Tidel Park) முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இது சிவகங்கை மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தப் பயணத்தின் போது ரூ.2,559.50 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கும் முதலமைச்சர், ரூ.13.36 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 15,453 பயனாளிகளுக்கு ரூ.205.06 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.

செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி கட்டடங்கள் ஆகியவையும் இந்தப் பயணத்தின் போது பயன்பாட்டிற்கு வர உள்ளன. மொத்தத்தில், 2026 தேர்தலுக்கான ‘வளர்ச்சி அஸ்திரத்தை’ சிவகங்கையில் இருந்து முதலமைச்சர் ஏவுகிறார் என்பது மட்டும் உறுதி.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram