காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (ஜூன் 12) தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துள்ளார். இதன்மூலம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேரில் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. மேலும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த நீர் பயன்படும். சென்னையிலிருந்து நேற்று காலை விமானம் மூலம் கோவைக்கு சென்ற முதல்வர், pதிருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, வேளாண் கண்காட்சியையும் தொடங்கி வைத்திருந்தார். அதன் பின் சேலம் வருகை தந்த முதல்வருக்கு, பவானி–மேட்டூர் எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து உள்ளனர். அங்கிருந்து நவப்பட்டியில் உள்ள நீர்வளத்துறை ஆய்வு மாளிகை வரை 11 கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் பயணித்த முதல்வர், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார்.
பின்னர், நவப்பட்டி பகுதியில் உள்ள திருமலை வாசவி திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். இன்று (ஜூன் 12) காலை 9.30 மணிக்கு, மேட்டூர் அணையின் இடதுக்கரை, வலதுக்கரை மற்றும் பூங்கா பகுதிகளில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வலதுக்கரையில் பிரதான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முதல்வர் ஸ்டாலின், மேட்டூர் அணையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உள்ளார். விழாவிற்குப் பிறகு, முதல்வர் சேலம் மாவட்டம் இரும்பாலை அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பணியும் நடைபெறுகிறது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதுடன், சேலம் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின், முதல்வர் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு சென்று மதிய உணவு அருந்துகிறார். சிறிது ஓய்வுக்குப் பிறகு, அங்கிருந்து காமலாபுரம் விமான நிலையத்திற்குச் செல்லுகிறார். மாலை 4.45 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்புகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காகவும், நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற அரசுத் துறைகள் மற்றும் திமுகவின் ஒத்துழைப்புடன் அமைச்சர் எ.வ. வேலு, வழக்கறிஞர் ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் மேற்பார்வையில் முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.