2026-ம் ஆண்டு பிறந்துள்ள மகிழ்ச்சியில் மக்கள் திளைத்திருக்கும் வேளையில், எண்ணெய் நிறுவனங்கள் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்திப் பேரதிர்ச்சியை அளித்துள்ளன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில், 2026-ன் முதல் நாளான இன்று வணிக சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் புதிய விலை: சென்னையில் நேற்று வரை ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர், இன்று முதல் ரூ.110 உயர்த்தப்பட்டு ரூ.1,849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இல்லத்தரசிகளுக்கு நிம்மதி: வணிக சிலிண்டர் விலை உயர்ந்தாலும், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது இல்லத்தரசிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து ரூ.868.50 என்ற விலையிலேயே நீடிக்கிறது.
யாரைப் பாதிக்கும்? வணிக சிலிண்டர் விலை உயர்வு நேரடியாக ஹோட்டல்கள், டீ கடைகள் மற்றும் கேட்டரிங் தொழில் செய்வோரைப் பாதிக்கும். சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் டீ, காபி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களின் பாக்கெட்டுகளுக்குக் கூடுதல் சுமை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
முக்கிய நகரங்களில் வணிக சிலிண்டர் விலை (19 Kg):
-
சென்னை: ரூ. 1,849.50 (ரூ. 110 உயர்வு)
-
டெல்லி: ரூ. 1,691.50 (ரூ. 111 உயர்வு)
-
மும்பை: ரூ. 1,642.50 (ரூ. 111 உயர்வு)
-
கொல்கத்தா: ரூ. 1,795.00 (ரூ. 111 உயர்வு)
புத்தாண்டின் முதல் நாளிலேயே விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வர்த்தகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


