உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதும், அகமதாபாத் மைதானம் முழுவதும் கொண்டாட்ட உற்சாகத்தில் மூழ்கியது. இந்திய வீரர்கள் ஒருவருக்கொருவர் அணைத்துக்கொண்டு வெற்றியை கொண்டாடிய நிலையில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் ஒரு செயல் தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
கொண்டாட்டத்தின் போது ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியை தனது தோளில் போர்த்திக்கொண்டு மைதானத்தில் சுற்றி வந்தார். பின்னர் அதே கொடியுடன் தரையில் படுத்தபடி புகைப்படம் எடுத்ததும், அருகிலிருந்தவர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. குறிப்பாக தேசியக் கொடி முதுகில் இருந்தபடி நடந்துகொண்ட காட்சிகள் பலரிடமும் எதிர்ப்பை ஏற்படுத்தின.
இந்த படங்கள் வெளியாகியதும், தேசியக் கொடியை மரியாதையுடன் கையாள வேண்டிய நிலையில் இவ்வாறு பயன்படுத்துவது தவறு என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், 1971 ஆம் ஆண்டு தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசியக் கொடியை தவறாக பயன்படுத்துவது குற்றமாகும் என்றும், இந்தச் சம்பவத்திற்கும் அதே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதலில் சம்பவம் அகமதாபாத் மைதானத்தில் நடந்ததால் புகாரை ஏற்க போலீசார் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தேசியக் கொடி என்பது முழு நாட்டின் மரியாதையை பிரதிபலிக்கும் சின்னம் என்பதால், எங்கு வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்று வழக்கறிஞர் வலியுறுத்தியதையடுத்து புகார் ஏற்கப்பட்டது.
இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சிலர் இது வெற்றி உற்சாகத்தில் நடந்த செயல் என கூறினாலும், பலர் தேசியக் கொடியின் மரியாதை முதன்மை என வலியுறுத்தி வருகின்றனர்.


