தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த மோதல்கள் பகிரங்கமாகத் தொடங்கியுள்ளன. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. சண்முகம், திமுக தங்களது கட்சிக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்துக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தொகுதிகளைக் குறைப்பது என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லாத ஒரு செயல்” என்று அவர் நேரடியாகவே சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவால் காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு மட்டும் அதிகத் தொகுதிகளைக் கொடுக்க முடிகிறது. ஆனால், களத்தில் வலுவாக இருக்கும் இடதுசாரிகளுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்வதை எங்களால் ஏற்க முடியாது. மற்ற கட்சிகளை விட எங்களிடம் ஆழமான வாக்கு வங்கியும், வலுவான தொண்டர் படையும் உள்ளது. எனவே, எங்கள் பலத்திற்கு ஏற்ற தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்.
அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். விஜயகாந்தின் தேமுதிக-விற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும், தங்களுக்கு இடங்கள் குறைக்கப்படுவதையும் சிபிஎம் தலைமை ஒரு கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கிறது. இதனால், வரும் நாட்களில் திமுக – சிபிஎம் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மேலும் இழுபறி நீடிக்க வாய்ப்புள்ளது. திமுக தரப்பு இந்த எச்சரிக்கைக்கு எப்படிப் பதிலளிக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


