ஐபிஎல் 2026 தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிகள் நேற்று லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் மோதின. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த டெல்லி அணி, லக்னோவை ரன் எடுக்க விடாமல் திணறடித்தது. டெல்லி வீரர்களான டி. நடராஜன் (3/29) மற்றும் லுங்கி என்கிடி (3/27) ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சால் லக்னோ அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்குச் சுருண்டது. லக்னோ தரப்பில் அப்துல் சமத் (36) மற்றும் மிட்செல் மார்ஷ் (35) மட்டுமே ஓரளவுக்குப் போராடினர்.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே கே.எல். ராகுல் ‘கோல்டன் டக்’ அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, டெல்லி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்த இக்கட்டான சூழலில் ‘இம்பாக்ட் பிளேயராக’ களம் புகுந்த இளம் வீரர் சமீர் ரிஸ்வி, அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 70 ரன்கள் (நாட் அவுட்) குவித்து அசத்தினார். இவருக்குத் துணையாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 39 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 17.1 ஓவர்களிலேயே 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி, டெல்லி அணிக்கு இந்த சீசனின் முதல் வெற்றியைத் தேடித்தந்தது. ஆட்டநாயகனாக சமீர் ரிஸ்வி தேர்வு செய்யப்பட்டார்.


