புதுடெல்லி: இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைக்க உள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து 11 முறை கொடியேற்றி வைத்துள்ளார்.
இது 12 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையானது பத்து முறை கொடியேற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முறியடித்துள்ளது. சுதந்திர தின விழாவை ஒட்டி செங்கோட்டையில் நாளை காலை ஏழு முப்பது மணியிலிருந்து நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளது.
அப்போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இணை மந்திரி சஞ்சய் சேட் ஆகியோர் வர இருக்கின்றனர். நிகழ்வுகளை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்வையாளர்களுக்கு நேற்று அனுமதி கொடுக்கப்படாத நிலையில் இன்றும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்து நெரிசல் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளை கட்டுப்படுத்த வணிக வாகனங்களுக்கு நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக 10,000 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து பணிக்கு 3000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஆயுதப்படையினர் உள்ளிட்ட துணை ராணுவ படையினர் 2000 பேர் செங்கோட்டை பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.