வங்கதேசம்: வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, வங்கதேச அரசுக்கு விடுத்த வேண்டுகோள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு உதவுவதாக முன்வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மைமென்சிங்கில் உள்ள ஹரிகிஷோர் ரே செளத்ரி சாலையில் அமைந்துள்ள இந்த வீடு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையானது. இது சத்யஜித் ரேயின் தாத்தாவும், புகழ்பெற்ற எழுத்தாளரும், பதிப்பாளருமான உபேந்திரகிஷோர் ரே சௌத்ரி என்பவரால் கட்டப்பட்டது. 1947 பிரிவினைக்குப் பிறகு, இந்தச் சொத்து வங்கதேச அரசின் கீழ் வந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் மிகவும் மோசமான நிலையில் இருந்த இந்த வீட்டை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வங்கதேச அரசு திட்டமிட்டிருந்தது. இந்தத் தகவல் வெளியானதும், இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டது. குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு இந்த வீட்டைப் பாதுகாக்க வலியுறுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வங்கதேச அரசுக்கு, “வங்கதேச கலாசார மறுமலர்ச்சியைக் குறிக்கும் இந்தக் கட்டிடத்தின் மைல்கல் அந்தஸ்தை கருத்தில் கொண்டு, இடிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பழுது மற்றும் புனரமைப்புக்கான விருப்பங்களை ஆராய்வது விரும்பத்தக்கது. இது இலக்கிய அருங்காட்சியகமாகவும் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் பகிரப்பட்ட கலாசாரத்தின் அடையாளமாகவும் இருக்கும். இந்த நோக்கத்திற்காக இந்திய அரசு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கும்” எனத் தெரிவித்தது.
இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்குப் பிறகு, சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது கலை ஆர்வலர்கள் மற்றும் வரலாற்றைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த வீடு விரைவில் புதுப்பிக்கப்பட்டு, ஒரு கலாச்சார மையமாக அல்லது அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.