‘பேரலஸ் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி முதன்முதலாக தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஜிவி.பிரகாஷ். இவர் சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் போது நடிகராக மாற்றத்தை புதுப்பித்து இருந்தார். தற்சமயம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி சினிமா உலகத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். இவரது தயாரிப்பில் உருவாகும் படமானது கிங்ஸ்டன்.
அதில் அவர் நடித்தும் உள்ளார். இப்படத்திற்கு இவர் தயாரிப்பாளராக எப்படி அறிமுகமோ, அதேபோல் இயக்குனர் கமல் பிரகாஷும் இப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்திருந்தது. இவ்விழாவிற்கு வெற்றி மாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து மற்றும் சுதா கொங்கோரா போன்ற இயக்குனர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர்.
இப்படம் குறித்து பா.ரஞ்சித் அவர்கள் பேசுகையில், இந்த படம் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய ஜானராக இருக்கும். முற்றிலும் கடல் மற்றும் அதன் சார்ந்த அட்வெஞ்சர்ஸ் நிறைந்த காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. பொதுவாக புதிய ஜானர்களில் படம் எடுக்க வேண்டும் என்றால், தயாரிப்பு நிறுவனத்திற்கு சற்று தயக்கம் இருக்கும். ஆனால் இந்த படத்திற்கும் இந்தப் படத்திற்கான பட்ஜெட்டிற்கும் சம்பந்தமே கிடையாது.
குறைந்த பட்ஜெட்டில் அவ்வளவு நேர்த்தியாக படம் எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் வி.எஃப்.எஸ் கிராபிக்ஸ் வைத்து படத்தை எடுத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இயக்குனர் அவரது முதல் படத்திலேயே திறம்பட செயல்பட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜிவி குறித்து பேசுகையில், இசையில் நான் கூறியதை கூறுவது போல் புரிந்து கொள்பவர்களில் சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்தபடியாக ஜிவி உள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.