நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமான விவாதம் நிலவி வருகிறது. தனது கட்சியை பாஜக வில் இணைத்த பிறகு, எதிர்பார்த்த அளவில் அரசியல் முக்கியத்துவமும் பொறுப்பும் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருகாலத்தில் திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய சரத்குமார், பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி தனித்த அரசியல் அடையாளத்தை உருவாக்க முயன்றார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியின் ஆதரவுடன் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தது அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட தேர்தல் தோல்விகளால் கட்சியின் அரசியல் செல்வாக்கு மெல்ல குறையத் தொடங்கியது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கும் முடிவை எடுத்தார். தேசிய கட்சியில் இணைந்தால் தன்னுடன் வந்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன்பிறகு பெரிய அளவில் எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படாததால் அதிருப்தி உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இரண்டு ஆண்டுகளாக எந்தப் பொறுப்பும் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் என்று குறிப்பிட்டு, பொறுத்தார் பூமியாழ்வார் என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார். இந்த பதிவு அவரது மனநிலையை மறைமுகமாக வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருப்பதும், அடுத்த கட்டத்தில் புதிய அரசியல் முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக மீண்டும் திமுக அணியை நோக்கி அவர் நகரலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


