தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளைப் படுவேகமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் இரண்டு நாட்களில் ஒரு உயர்மட்டக் குழுவை திமுக தலைமை அறிவிக்க உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது 5 பேர் கொண்ட குழுவை அறிவித்து, 70 தொகுதிகள் வரை குறிவைத்து வேலை செய்து வரும் நிலையில், திமுகவின் இந்தக் குழு அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, கூட்டணிக்குள் நிலவிய சில ‘பவர் ஷேரிங்’ (Power Sharing) சர்ச்சைகள் ஓய்ந்துள்ளன. “ஆட்சியில் பங்கு இல்லை, ஆனால் தொகுதிகளில் கௌரவமான எண்ணிக்கை” என்ற ஃபார்முலாவோடு பேச்சுவார்த்தை அமையலாம் எனத் தெரிகிறது. திமுக அமைக்கப்போகும் இந்தக் குழுவில் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளும் தங்களுக்குக் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் சூழலில், திமுக கடந்த 2021 தேர்தலைப் போலவே ஒரு கச்சிதமான ஃபார்முலாவைக் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புதிய கட்சிகளின் வருகையால் (விஜய்யின் தவெக) வாக்குகள் சிதறாமல் இருக்க, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதே ஸ்டாலினின் வியூகமாக இருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் வெளியாகப்போகும் அந்தக் குழுவின் பட்டியல் தான், 2026 தேர்தலுக்கான திமுகவின் முதல் அதிகாரப்பூர்வ ‘அரசியல் மூவ்’ ஆக இருக்கும்.

