தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு மற்றும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணியுடன் களமிறங்க, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்றவை தனித்துப் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், திமுகவில் முக்கியமான மாற்றம் ஒன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி, இந்த முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என கூறப்படுகிறது. 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த அவர் இந்த முறை விலகுவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அவருக்கு பதிலாக, அவரது மகன் பொன். கௌதம சிகாமணி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெறலாம் என்ற தகவல்கள் வலுவாகின்றன. இதற்கு ஆதாரமாக, அவர் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம், பொன்முடி இதுவரை விருப்பமனு அளிக்காததும் இந்த தகவல்களுக்கு மேலும் உறுதிப்படுத்தலாக பார்க்கப்படுகிறது.
மேலும், திருக்கோவிலூர் தொகுதியின் கீழ் வரும் தி.எடையார் உள்ளிட்ட பகுதிகளில் “திமுக வெற்றி வேட்பாளர் பொன். கௌதம சிகாமணி” என சுவர் விளம்பரங்கள் எழுதி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தும் பிரச்சாரங்களும் தொடங்கியுள்ளன. இது கட்சியின் உள்நிலை முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஆனால், திமுக தலைமையிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இந்த மாற்றம் உறுதியாகுமா அல்லது கடைசி நேரத்தில் வேறு திருப்பம் ஏற்படுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் கவனமாக கண்காணித்து வருகின்றன.




