கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் பிட்ச் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
மைதானத்தை குறை சொல்வதை மறுத்த அவர், தாங்கள் விரும்பியபடியே பிட்ச் தயார் செய்யப்பட்டதாகவும், தோல்விக்கான முழுப் பொறுப்பையும் வீரர்கள் ஏற்று, தங்கள் திறமையை மேம்படுத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
போட்டி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த கம்பீர், ஆடுகளம் குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “இந்தப் பிட்சில் எந்தப் ‘பிசாசும்’ இல்லை. இது விளையாட முடியாத அளவுக்கு மோசமான பிட்ச் இல்லை.
இதுதான் எங்களுடைய தேவை. இதைத்தான் நாங்கள் கேட்டோம். இந்த பிட்சைத்தான் க்யூரேட்டர் எங்களுக்காகத் தயார் செய்தார். ஆனால், நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால், இதுதான் நடக்கும்,” என்று கம்பீர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் டெக்னிக் மற்றும் மன உறுதியைச் சோதித்தது. நிதானமாக விளையாடி, நீண்ட நேரம் களத்தில் நிற்க முடிந்தவர்களால் மட்டுமே ரன்கள் எடுக்க முடிந்தது.
“பிட்ச் எப்படி இருந்தாலும், இலக்கான 124 ரன்கள் துரத்தக்கூடியதே என்று நான் இன்னமும் நம்புகிறேன். நீங்கள் சவால்களை ஏற்று, விடாமுயற்சியுடன் விளையாடத் தயாராக இருந்தால், நிச்சயம் ரன்கள் எடுக்கலாம். விக்கெட் குறித்த விவாதங்களை விட, நாங்கள் உளவியல் ரீதியாகவும், திறன் ரீதியாகவும் முன்னேற வேண்டும். ஏனெனில், பிட்ச் இரண்டு அணிகளுக்கும் ஒன்றுதான்,” என்று கம்பீர் அழுத்தமாகப் பதிவு செய்தார்.


