விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செல்போனில் நேரத்தை வீணடிக்காதே என்று கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்த விஜய்–ஸ்ரீமதி தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
விஜயின் அக்கா அமலா ஏழுமலை செங்கல்பட்டு மாவட்டம், பரமன் கேணி மீனவ கிராமத்தை சேர்ந்தவர். இவர்களுக்கு கீர்த்திகா என்ற 15 வயது மகள் இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை இறந்து விட்டதை அடுத்து தனது மகளுடன் பனிச்சமேடு கிராமத்தில் தம்பி விஜய் வீட்டின் அருகே குடியேறியுள்ளார். விஜயின் வீட்டில் வளர்ந்து வந்த கீர்த்திகா அனுமந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று முன்தினம் ஸ்ரீமதி விஜய் கீர்த்திகா ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாப்பிட்ட பின் கீர்த்திகா மாடியில் தூங்க சென்றுள்ளார். ஸ்ரீமதி மற்றும் அவரது கணவர் விஜய் ஆகியோர் கீழே தூங்கி உள்ளனர். சம்பவம் நடந்த அன்று நேற்று அதிகாலை மீன்பிடிப்பதற்காக விஜய் சென்றுவிட்டார்.
ஸ்ரீமதி மற்றும் கீர்த்திகா இருவரும் நீண்ட நேரம் ஆகிய வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அமலா மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். ஸ்ரீமதி மற்றும் கீர்த்திகா ஆகியோர் வீட்டில் பிணமாக கிடந்துள்ளனர். மரக்காணம் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
விசாரணையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிடும் போது செல்போனில் நேரத்தை செலவிடாதே! என்று கீர்த்திகாவை கண்டித்துள்ளார் அத்தை. பத்தாம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த கீர்த்திகா மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் திட்டியதால் தான் கீர்த்திகா தற்கொலை செய்து கொண்டார் என்று மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீமதியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.