கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 32 வயதான விஷ்ணு மற்றும் அவரது மனைவி ரஷ்மி (30) ஆகியோர் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். விஷ்ணு ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தவர். அவரது மனைவி ரஷ்மி ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார். சமீபத்தில் நடந்த சம்பவம் அவர்களது வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. ஒரு நாள் வீட்டு உரிமையாளர் விஷ்ணுவை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் எந்த பதிலும் தரவில்லை.
சந்தேகமடைந்த உரிமையாளர் நேரில் வந்து பார்த்தபோது, கதவு திறந்திருந்தது. உள்ளே நுழைந்த அவர், அந்த தம்பதிகள் இருவரும் உயிரற்ற நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட தகவலின்படி, விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இறப்பின் உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது மரணம் அந்த பகுதியை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. தம்பதிகள் எதற்காக இப்படியான முடிவை எடுத்தனர் என்பது தொடர்பான உண்மைகள் இன்னும் வெளிவரவில்லை.





