நன்றி மறந்த எடப்பாடி.. டெல்லி கனவில் ஈபிஎஸ்!! மரியாதை இல்லை டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!!

dr-krishnasamy-puthiya-tamilagam-attacks-eps-amit-shah-cm-dream-2026-election

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகள் 169 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான புதிய தமிழகம் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“டெல்லியில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள்; அவர்கள் எப்படியாவது தன்னை மீண்டும் முதலமைச்சராக்கி விடுவார்கள் என்ற பகல் கனவோடு ஈபிஎஸ் இந்தத் தேர்தலை அணுகுகிறார்” என அவர் விமர்சித்துள்ளார். மேலும், “தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய சசிகலா, நீண்ட காலம் அரசியல் பயணத்தில் உடன் இருந்த ஓபிஎஸ் ஆகியோரையே அவர் புறக்கணித்து விட்டார். அப்படிப்பட்டவர் கூட்டணிக் கட்சிகளுக்கு எப்படி உரிய மரியாதை கொடுப்பார்?” என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈபிஎஸ்-ன் இந்த ‘டெல்லி விசுவாசம்’ மற்றும் தனிப்பட்ட அரசியல் லாபம் தேடும் போக்கு, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ள சூழலில், கிருஷ்ணசாமியின் இந்தப் பேச்சு அதிமுக – பாஜக கூட்டணியின் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவேளை தொகுதிப் பங்கீட்டில் திருப்தி இல்லாவிட்டால், புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்தோ அல்லது வேறு கூட்டணி குறித்தோ அடுத்தகட்ட முடிவை எடுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram