சமீபத்தில் மத்திய அரசு கடுமையான அடிப்படை சுங்கவரி குறைப்பு அறிவித்ததைத் தொடர்ந்து, பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக, பாமாயில், சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களின் இறக்குமதி கட்டணங்கள் குறைந்ததால் அவற்றின் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை குறைந்துள்ளது.
பாமாயில் விலை கடந்த வாரம் ரூ.135 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.125 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.155 இருந்து ரூ.140 ஆகவும் குறைந்துள்ளது. நல்லெண்ணெய் விலை கூட லிட்டருக்கு ரூ.5 வரை குறைந்து மக்கள் ஆறுதலடைகின்றனர். ஆனால், தேங்காய் எண்ணெயின் விலை மட்டும் எதிர்பாராத விதமாக உயர்ந்து வருகிறது. கடந்த 45 நாட்களில் லிட்டருக்கு ரூ.140 வரை உயர்ந்து தற்போது ரூ.400 வரை விற்பனை ஆகி வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மட்டுமன்றி உணவக உரிமையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.
மற்ற எண்ணெய்களின் விலை மலிவு மகிழ்ச்சி அளித்தாலும் தேங்காய் எண்ணெயின் இந்த விலை உயர்வு வருத்தத்தை அளிக்கிறது. வியாபாரிகள் கூறுவதாவது, கொப்பரையின் (உலர்ந்த தேங்காய்) உற்பத்தி குறைவதும், பண்டிகை காலங்களில் தேவை அதிகரிப்பதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். சமையல் எண்ணெய்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களுக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்தாலும், தேங்காய் எண்ணெயின் விலை உயர்வு இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு சுமையாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.