சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை மாவட்டங்கள்:
தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் குறிப்பாக கோவையில் சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
கோயம்புத்தூர், வால்பாறை வட்டத்தில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று ஜூன் 16 மட்டும் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்.
இன்று கனமழை பெய்ய வாய்ப்பு:
நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் அரசு பயணமாக புதுச்சேரி செல்கிறார். துணை குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மதியம் 2 மணி வரை புதுச்சேரி பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.