சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, சட்டம் ஒழுங்கு விவகாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரிகள் தொடங்குவது தொடர்பான பழனிசாமியின் விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பாமக நிர்வாகி வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் “துப்பாக்கி கலாச்சாரம்” தலைதூக்கியுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், “தமிழகத்தின் பாதுகாப்பைச் சீர்குலைத்துச் சீரழிவு ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அரசைக் குறை சொல்ல எந்த அருகதையும் கிடையாது” என்று காட்டமாக தெரிவித்தார்.
சக்கரவர்த்தி வழக்கில், சம்பவம் நடந்த 3வது நாளே இரு முக்கிய குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளதாகவும், இதுதான் நடைமுறை என்றும், உள்துறையை தன் வசம் வைத்திருந்த பழனிசாமிக்கு இந்த அடிப்படை அறிவுகூட இல்லை என்றும் விமர்சித்தார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் சிவசங்கர், “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். முதல் நாள் பேசியதையே, மறுநாள் மறுத்துப் பேசுகிறார். அடுத்த நாள் வேறொரு புதுக் கதையை, அவரே திரித்துப் பேசுகிறார். பாஜக, பழனிசாமி தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டு, பாஜகவின் கொள்கைகளை பழனிசாமி பேசுகின்ற சூழலுக்கு கொண்டு வந்து விட்டது” என்று கூறினார்.
சீமான் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசியதை விமர்சிக்கும்போது, பழனிசாமி மனிதனையே மனிதனாக நினைத்துப் பேச மாட்டார், மாக்களாகத்தான் நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுவார், அதன் உச்சமாக ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் சிவசங்கர் விமர்சித்தார்.