அதிமுக தான் பாஸ் டெல்லிக்கு இங்க வேலையில்லை திமுக-வின் பழைய முகத்திரையைக் கிழித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வேலைகளில் வேகம் காட்டி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆளுங்கட்சியான திமுக-வை சரமாரியாக விமர்சித்தார்.
கூட்டணிக்கு அதிமுக-வே தலைமை: “அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி, நாங்களே தலைமை தாங்குவோம். கூட்டணி என்பது அந்தந்த காலகட்டத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப அமைவது. இதில் டெல்லியில் இருந்து யாரும் ஆட்சி நடத்த முடியாது, அப்படி நடத்தவும் விடமாட்டோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
திமுக-வுக்கு நச் கேள்வி: பாஜக-வை மதவாத கட்சி என விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்த ஈபிஎஸ்:
-
“பாஜக-வை இன்று விமர்சிக்கும் திமுக, முன்பு அதே பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்ததே? அப்போது டெல்லியில் இருந்துதான் ஆட்சி நடத்தப்பட்டதா?” என வினவினார்.
-
“அதிகாரத்திற்காக யாரிடம் வேண்டுமானாலும் திமுக கூட்டணி வைக்கும் என்பதற்கு அவர்களது வரலாறே சாட்சி” என்றும் சாடினார்.
ஆட்சி குறித்துச் சவால்: தனது நான்காண்டு கால ஆட்சி குறித்துப் பேசிய அவர், “என்னுடைய ஆட்சி காலத்தில் ஒரு சிறு தவறைக்கூட யாராலும் சுட்டிக்காட்ட முடியாது. சட்டம் ஒழுங்கு முதல் மக்கள் நலத்திட்டங்கள் வரை அனைத்தும் சிறப்பாக இருந்தன. எங்களைப் பார்த்து ஊழல் குறித்துப் பேச திமுக-வுக்குத் தார்மீக உரிமை இல்லை” என ஆவேசமாகப் பேசினார்.
பாமக விவகாரம்: அன்புமணி – ராமதாஸ் இடையேயான மோதல் குறித்துப் பெரிய அளவில் கருத்து கூறாத அவர், அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை மட்டும் உறுதிபடத் தெரிவித்தார்.


