தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களில் நடித்த நளினி, சமீபத்தில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் மடிப்பிச்சை எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 1981ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் ராணுவ வீரன் படத்தின் மூலம் திரையுலகுக்கு வந்த நளினி, விஜயகாந்த், அர்ஜூன், மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட்டுப் படங்களை தந்துள்ளார். பின்னர் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டு 10 வருடங்களுக்குப் பின் பிரிந்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு மீண்டும் திரைக்கு வந்த நளினி, காதல் அழிவதில்லை படத்தில் சார்மியின் தாயாக நடித்தார். அதன் பிறகு நெகடிவ் கதாபாத்திரங்களிலும், பின்னர் காமெடி ரோல்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
லண்டன், அரண்மனை போன்ற படங்களில் வடிவேலு போன்ற காமெடி நடிகர்களுடன் பணியாற்றி புகழ்பெற்றார். சினிமாவுக்கு இடையே கோவில்களுக்கு செல்வதும், அம்மன் தரிசனம் செய்வதும் நளினிக்கு பழக்கமாகும். குறிப்பாக திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் மற்றும் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் என பல இடங்களில் இவர் பக்தி செலுத்தி வருகிறார். ஆடி மாதத்தையொட்டி திருவேற்காடு கோவிலுக்கு சென்ற நளினி, “அம்மன் கனவில் வந்து என்ன செய்யப் போகிறாய் என கேட்டதால் மடிப்பிச்சை எடுத்தேன். அதில் கிடைக்கும் காணிக்கையை திருப்பணி நிதியாக அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் வெளியாகி நளினியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.