பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது. குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் பல பெண்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கில் 49 வயதுடைய பெண் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி பசவேஸ்வரநகரின் கிரிலோஸ்கர் காலனியைச் சேர்ந்தவர். அவருடன் இணைந்து செயல்பட்டவர் சுனகடகட்டே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் ஐந்து நாள் காவலில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பணக்கார பெண்களையே குறிவைத்து தன்னை சமூக ஆர்வலராகவும், ரியல் எஸ்டேட் ஏஜெண்டாகவும், அரசியல் தொடர்புகள் உள்ள தங்க வியாபாரியாகவும் காட்டிக் கொண்டுள்ளார். அவர் தன்னுடைய நம்பிக்கையான பேச்சு மற்றும் நெட்வொர்க்கிங் திறன்கள் வாயிலாக பலரிடம் நெருக்கமாக பழகியுள்ளார்.
சின்ன சின்ன பார்ட்டிகள் நடத்தி பெண்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். மலிவான வெளிநாட்டு தங்கம், டிவி டெண்டர் மற்றும் உயர்தர ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும் வாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் அளித்து பல பெண்களிடமிருந்து பணம் பெற்றுள்ளார். சிலர் நேரடியாக ரொக்கமாகவும், மற்றவர்கள் ஆன்லைன் பரிமாற்றம் வாயிலாகவும் பணம் கொடுத்துள்ளனர். அந்தப் பணத்தை வைத்து அவரின் கூட்டாளி தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியிருக்கிறார். உண்மையில் அவர்கள் சிட் ஃபண்ட் பிசினஸ் நடத்தி வந்தனர்.ஒரு வருடத்துக்கும் மேலாக முதலீட்டாளர்கள் பணம் திரும்ப கேட்டும் பணம் திருப்பித் தரப்படவில்லை. வட்டி கூட வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 30 பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடியில் ஒரு திரைப்பட இசை அமைப்பாளரும் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.