கடந்த வாரம் வரை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று (பிப்ரவரி 2, 2026) யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
சென்னையில் வாரத்தின் முதல் நாளான இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.7,600 குறைந்துள்ளது. இதன்படி, நேற்று ரூ.1,19,200-க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கித் தலைவராக ‘கெவின் வார்ஷ்’ நியமிக்கப்பட்டதையடுத்து அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்தது போன்றவை இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபத்தை எடுக்கத் (Profit Booking) தொடங்கியுள்ளதும் விலையைக் குறைக்க வழிவகுத்துள்ளது.
வெள்ளி விலையும் தங்கத்தைப் போலவே சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.22,800 வரை குறைந்துள்ளது வரலாற்றில் ஒரு அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கக் காத்திருந்த மக்களுக்கு இந்த விலை வீழ்ச்சி ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.


