தேனி மாவட்டத்தை உலுக்கிய கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி மீது அவரது தாத்தாவான வைரவன் மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, “இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டி, அரிவாளால் சிறுமியின் காலில் காயம் ஏற்படுத்தியதும் விசாரணையில் வெளியாகியுள்ளது.
இதனைப்பற்றி சிறுமியின் தாய் மனவேதனையால் நீதிமன்றத்தை நாடி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் குற்றவாளி வைரவனை கைது செய்தனர். பின்னர் தேனி குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் தலைமையில் விசாரணை தொடங்கியது.விசாரணை முழுமையாக நடைபெற்றபோது, முக்கிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் அனைத்தையும் ஆய்வு செய்த நீதிமன்றம், குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டது எனத் தெரிவித்தது.
இதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வைரவனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை, ₹12,000 அபராதம், அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன.இதோடு நிற்காமல், சிறுமியின் உடல் மற்றும் மனநிலை பாதிப்பை கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, ஒரு மாதத்திற்குள் ₹9.88 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், அதில் ₹1.88 லட்சம் உடனடியாக பெற்றுத் தரப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மீதமுள்ள ₹8 லட்சம் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு, அதன் வட்டி தொகையை சிறுமிக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. குற்றவாளி வைரவன் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், சமூகத்தில் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
சிறுமி எதிர்கொண்ட துயரத்தை சமூகம் மட்டும் அல்ல, அரசும் முழுமையாக புரிந்துகொண்டு, அவருக்கான மனநலம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த வழக்கு, “குடும்பத்தினரிடமிருந்தே குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு மிக அவசியம்” என்பதை நினைவூட்டும் வகையில் உள்ளது.