ஐபிஎல் 2026-ல் இருந்து ஹர்ஷித் ராணா விலகல்!! KKR-க்கு விழுந்த பேரிடி.. மாற்று வீரரைத் தேடும் KKR!!

harshit-rana-ruled-out-ipl-2026-kkr-injury-update-replacement-news-tamil

மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு, ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பே ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, முழங்கால் காயம் (Knee Injury) காரணமாக இந்தத் தொடர் முழுவதிலும் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. அதற்காகப் பிப்ரவரி 9-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்குள் அவர் முழு உடல் தகுதியைப் பெற முடியாது என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

2024-ம் ஆண்டு KKR சாம்பியன் பட்டம் வென்றதில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி ராணா முக்கியப் பங்காற்றினார். கடந்த சீசனிலும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவரை, இந்த முறை ரூ.4 கோடிக்கு அணி தக்கவைத்திருந்தது. இந்நிலையில், அவர் விலகியது அணியின் ‘டெத் ஓவர்’ பந்துவீச்சில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக வைபவ் அரோரா, உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி அல்லது ஆகாஷ் தீப் ஆகியோரில் ஒருவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஏற்கனவே முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட நிலையில், இப்போது ராணாவும் இல்லாதது KKR அணிக்கு இரட்டைப் பாதிப்பாகும். இதற்கிடையே, ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானி (Blessing Muzarabani) அணியில் இணைந்திருப்பது ஒரு சிறு ஆறுதலாகப் பார்க்கப்படுகிறது. ஹர்ஷித் ராணாவுக்கு இணையான ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரை மாற்று வீரராகத் தேடும் பணியில் KKR நிர்வாகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram