தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கிராமமான சீங்காடு கிராமத்தில் நேற்று மாலை 4 மணியளவில் பெய்த கன மழை காரணமாக இதுவரை இல்லாத அளவு விவசாய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அனைவரும் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மே 1 முதல் 7ஆம் தேதி வரை ஆங்காங்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் நேற்று மழையுடன் ஆலங்கட்டி சேர்ந்து மழை பொழிந்துள்ளது. மழை நீரை விடவும் ஆலங்கட்டியானது அதிகப்படியான அளவு பொழிந்த காரணத்தால் விவசாய தாவரங்கள் முற்றிலும் அழிவுக்குள்ளானது. தக்காளி, மிளகாய், நெல், கேழ்வரகு, பூச்செடிகள் என அனைத்து விவசாய பயிர்களும் மிகவும் மோசமான நிலையில் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இதுவரை வரலாறு காணாத அளவிற்கு ஆலங்கட்டி ஆனது அதிகளவில் நீண்ட நேரம் பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் அனைத்தும் அடியோடு அழிந்ததாக வருத்தம் தெரிவித்து வருகின்றன. விவசாயிகள் லட்சக்கணக்கில் முதலீடு செய்து அனைத்தும் வீணாக போனதாகவும் எங்களுக்கு முதலீடு செய்த அனைத்துமே நஷ்டம்தான் எனவும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தக்காளி போன்ற செடிகளில் ஆலங்கட்டி விழுந்த பழங்கள் சேதமாகி அழுகி வரும் நிலையில் முழுவதும் எங்களுக்கு நஷ்டம் தான். ஒருவேளை எங்கள் விளைநிலங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டிருந்தால் அதற்கான இழப்பீடுகளை பெற்றிருப்போம் எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் கிராம மக்கள்.