திருநெல்வேலியில் கொடூரம்!! எரிந்த நிலையில் 4 சடலங்கள்!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சாலையோரத்தில் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட காரிலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்டைக்குளம் பகுதியில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் இன்று காலை தீயில் கருகிய நிலையில் கார் ஒன்று இருப்பதை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். காரின் உள்ளே நான்கு உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேலதிக அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையை தொடங்கினர். உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். கார் எவ்வாறு தீப்பற்றியது, தீ விபத்து ஏற்பட்ட பின்னர் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது உயிரிழந்த பின்னர் கார் எரிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் யார், அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், காரில் பயணம் செய்தவர்கள் தானா அல்லது வேறு காரணங்களால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. காரின் இயந்திர எண் மற்றும் பதிவு எண்ணின் மூலம் அதன் உரிமையாளர் யார் என்பதை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram