62 வயதான கொளஞ்சியப்பன் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வசித்து வந்தவர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி வீரலட்சுமி காலமான பிறகு, பத்மாவதி என்பவரை 25 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொளஞ்சியப்பன் தனது வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார்.
இந்த பழக்கம் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்கள் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தது, அவரது மனைவி பத்மாவதிக்கு தெரிய வந்தது. இது குறித்து பத்மாவதி கொளஞ்சியப்பரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் அந்த உறவை கைவிட மறுத்து விட்டார். இந்த காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தின் போது, கொளஞ்சியப்பன் தனது கள்ளக்காதலிக்கு வீட்டை எழுதி கொடுத்து விடுவேன் என்று கூறியதால், ஏற்கனவே பத்மாவதியிக்கு இருந்த கோபம் எல்லையை கடந்துவிட்டது. ஆனால் பத்மாவதி உடனடியாக எந்த எதிர்வினையும் காட்டவில்லை. மனதில் கொண்டிருந்த ஆத்திரத்தை வெறுப்பாக மாற்றிக்கொண்ட பத்மாவதி, திடீரென ஒரு முடிவுக்கு வந்தார். சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு, வேலை முடிந்து வீடு திரும்பிய கொளஞ்சியப்பன் சாப்பிட்டு முடித்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
அதிகாலை 2.15 மணியளவில் விழித்த பத்மாவதி, கணவனை பார்த்ததும் கோபம் வெடித்தது. உடனே வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து, தூங்கிக்கொண்டிருந்த கணவரின் தலையில் கடுமையாக தாக்கினார். ஒரே அடியில் தலையில் படுகாயம் ஏற்பட்டதால், கொளஞ்சியப்பன் அப்போதே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நெய்வேலி டவுன்ஷிப் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொளஞ்சியப்பனின் தம்பி பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் பத்மாவதி கைது செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.