பெங்களூரு, ஜூன் 7: பெங்களூருவின் அனேக்கல் அருகே நடந்த கோரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தனது மனைவியை கொன்று, தலையை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் நடமாட்டம் குறைவான சந்தாபுரம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரத்தக் கறையுடன் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறித்தனர்.
அவரை சோதனையிட, ஸ்கூட்டரில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை இருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காவல் விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்த சங்கர் எனத் தெரியவந்தது. தனது மனைவி மானசாவை கோடாரியால் வெட்டி கொன்ற பிறகு, அவரது தலையை துண்டித்து ஸ்கூட்டரில் வைத்து காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைய திட்டமிட்டதாக கூறியுள்ளார். சம்பவ இடமான ஹீலாலிகே கிராமத்தில் நேற்று இரவு இந்த கொலை நடைபெற்றது. 26 வயது மானசா, சங்கரின் மனைவி என உறுதி செய்யப்பட்டார்.
விசாரணையில் சங்கர், மனைவி மானசாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து வந்ததாகவும், அவளது நடத்தை பற்றி எச்சரிக்கை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மூன்று வயது குழந்தையுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் மற்றும் விவாகரத்து விவகாரம் பற்றியும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்கூட்டரில் மனைவியின் தலையுடன் சங்கர் ஓடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தொழில்நுட்ப நகராக புகழ்பெற்ற பெங்களூரு தற்போது கொலை நகராக மாறி விட்டதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.